விஜய்யின் ஜோடியாக பாலிவுட்டில் தற்போது நிறைய படங்கள் நடித்துவரும் கியாரா அத்வானி நடிப்பார் என முதலில் தகவல்கள் வெளியாகின.
விஜய்யின் 65 படமான ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 15 நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அதன்பிறகு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிடுவார் விஜய் என்கிறது ‘பீஸ்ட்’ வட்டாரம்.
‘விஜய் 66’ படத்தை தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் தெலுங்கில் முன்னணி இயக்குநர் என்பதும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான். மகேஷ் பாபுவை வைத்து வம்சி இயக்கிய ‘மகரிஷி’க்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் அக்கட தேசத்தில் ‘விஜய் 66’ பற்றி சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் வம்சி.

“விஜய் சார் தமிழ்ல பெரிய உயரத்துல இருந்தாலும், ரொம்பவே எளிமையா இருக்கார். அவரிடம் சின்ன ஐடியாதான் சொன்னேன். அது அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. மனித உறவுகளின் மகத்துவமும், எமோஷன்களும் என் படங்களில் நிச்சயம் இடம்பெறும். இதிலும் அதை எதிர்பார்க்கலாம். ஸ்கிரிப்ட் ஒர்க் இன்னும் இறுதிகட்டத்தை நெருங்கவில்லை. அடுத்த மாத இறுதிக்குள் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிடும். இது விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் ஜோடியாக பாலிவுட்டில் தற்போது நிறைய படங்கள் நடித்துவரும் கியாரா அத்வானி நடிப்பார் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் உண்மையில்லையாம். கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாகச் சொல்கிறார்கள். ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையலாம் என்கிறார்கள். இசையமைப்பாளராக தேவி ஶ்ரீ பிரசாத் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் வம்சி – தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பவர்கள். வம்சி தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான ‘முன்னா’வைத் தயாரித்தவர் தில் ராஜூதான். அதன்பிறகு வம்சியின் 5 படங்களில் ஒரு படம் தவிர அவரின் அனைத்து படங்களையும் தில் ராஜூவே தயாரித்திருக்கிறார். தற்போது ‘விஜய் 66’-ம் தில் ராஜூவின் தயாரிப்பில்தான் உருவாகவிருக்கிறது.
இப்போதைய நிலவரப்படி ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார்கள். 2022 தீபாவளிக்கு இப்படத்தைத் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Credits: cinema.vikatan.com


