Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

ஜெய் பீம்

Our Rating

விமர்சனம்

தயாரிப்பு – 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – த.செ.ஞானவேல்
இசை – ஷான் ரோல்டன்
நடிப்பு – சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன்
வெளியான தேதி – 2 நவம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் – 3.75/5

1990களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தூக்கி எறிந்து, ராஜா கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்.

இந்த வழக்கை மையமாக வைத்து சினிமாவுக்காக சில புனைவு காட்சிகளுடன் இந்த ஜெய் பீம் படத்தை உணர்ச்சிக் குவியலாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.

ஒரு சில விசாரணைகளில் காவல் துறையினரின் அத்துமீறல் மனித உரிமைகளை மீறி எந்த அளவிற்கு மிக மோசமாக இருக்கிறது என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே சிறையிலிருந்து வெளிவரும் சில சாதியினரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை குற்றவாளிகள் எனச் சொல்லி போலீசார் வழக்கை முடிப்பார்கள் என்பதைக் காட்டி அதிர்ச்சியூட்டுகிறார்கள். அந்த அதிர்ச்சி படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

ஊர் தலைவர் வீட்டில் இருந்து நகைகள் காணாமல் போய்விடுகிறது. அதற்கு முன்பாக அந்த வீட்டில் பாம்பு பிடிக்க வந்த இருளர் இனத்தைச் சேர்ந்த ராசாகண்ணு மீது சந்தேகம் இருக்கிறது என ஊர் தலைவர் போலீசிடம் புகார் அளிக்கிறார். வேறு ஊருக்கு வேலைக்குச் சென்ற ராசாகண்ணுவை போலீசார் பிடித்து அவரை விசாரிக்கிறார்கள். தான் திருடவில்லை என்று அவர் மன்றாடியும் அவரை கடுமையாகக் கொடுமைப்படுத்துகிறார்கள் போலீசார். ஒரு கட்டத்தில் ராசாகண்ணுவும் அவருடன் பிடிக்கப்பட்ட மேலும் இருவரும் தப்பித்துவிட்டார்கள் எனச் சொல்கிறார்கள். தனது கணவரைக் கண்டுபிடிக்க அறிவொளி இயக்க ஆசிரியை மைத்ரா உதவியை நாடுகிறார் ராசாகண்ணு மனைவி செங்கேணி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி மனித உரிமை வழக்குகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தும் சந்துருவின் உதவியை நாடுகிறார்கள். ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்படுகிறது. செங்கேணிக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நிஜமாக நடந்த சம்பவத்தைப் படமாக்கும் போது அதற்காக அதிகமான மெனக்கெடல் இருக்க வேண்டும். அதிலும் 1990களில் நடக்கும் கதை. அதற்காக எடுத்துக் கொண்ட கதைக்களம், பின்னணி, கதாபாத்திரங்கள், நட்சத்திரத் தேர்வு, அரங்க அமைப்பு, வசனங்கள் என ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறது படக்குழு.

மனித உரிமை வழக்குகளுக்காக 1 ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் வாதாடும் வக்கீல் சந்துருவாக சூர்யா. ஒரு நேர்மையான, கறாரான வக்கீல் எப்படி இருப்பார் என்பதை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். முன்னணி ஹீரோ தயாரித்து நடிக்கிறார் என்பதற்காக அவருக்கான ஹீரோயிசக் காட்சிகள் எதையும் வைக்காமல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் வைத்திருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி ஒரு நூல் அளவு கூட மீறாமல், குறையாமல் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார் சூர்யா.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் பார்த்த அக்கா லிஜோமோல் ஜோஸா இது என வியக்க வைக்கிறார். மலையாள நடிகைகள் மட்டும் யதார்த்தத்தை எப்படி இவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள் என்பது மிக ஆச்சரியம். தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம்தான். மிக சிறுபான்மையாக இருக்கும் இருளர் இனப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பது கூட இன்று பலருக்குத் தெரியாது. செங்கேணியாக வற்றாத கேணியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லிஜோ. இவரது நடிப்புக்காக ஜோராக கைதட்டினால் மட்டும் போதாது, விருதுகளும் கொடுத்து பாராட்ட வேண்டும்.

ராசாகண்ணுவாக மணிகண்டன். காலா, சில்லுக்கருப்பட்டி படங்களில் கவனிக்கப்பட்டவர். இந்தப் படத்தில் இவருக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்க்கவே பகீரென இருக்கிறது. அடி வாங்கி, அடிவாங்கி அவர் நடிக்கிறார் என்பதையே மறக்கும் அளவிற்கு கண் கலங்க வைக்கிறார்.

அறிவொளி இயக்க ஆசிரியையாக ரஜிஷா விஜயன், ஐ.ஜி.யாக பிரகாஷ் ராஜ் சில பல காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவர்களின் நேர்மையான நடிப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

யாரப்பா அந்த சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி என கேட்கவைக்கிறார் தமிழ். டெரர் போலீசாக கடைசி வரை மிரட்டிக் கொண்டே இருக்கிறார். அட்வகேட் ஜெனரலாக தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், பப்ளிக் பிராசிகியூட்டிராக குரு சோமசுந்தரம், சக வக்கீலாக எம்எஸ் பாஸ்கர் இன்னும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட அவர்களைப் பற்றிப் பேச வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்குப் பாடல்களே தேவையில்லை. ஆனாலும், ஓரிரு பாடல்களை வைத்திருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்திருக்கலாம். பின்னணி இசையில் ஷான் ரோல்டன் பிரமாதப்படுத்தி இருக்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிரோட்டமே பின்னணி இசைதான். அந்தக் காட்சிகளை தன் பின்னணி இசையால் எந்த அளவிற்கு மெருகூட்ட முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

இருளர் மக்கள் வசிக்கும் இடங்களின் யதார்த்தப் பதிவு, பெரும்பாலான காட்சிகள் ஒரே நீதிமன்ற அறையாக இருந்தாலும் அதில் எந்த அளவிற்கு விஷுவலாக பதிவு செய்ய முடியுமோ அதற்கான பதிவு என அதிகம் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். இரண்டே முக்கால் மணி நேரப் படம் எனத் தெரியாமல் போக படத் தொகுப்பில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத நீதிமன்ற அரங்கை உருவாக்கியிருக்கிறார் கலை வடிவமைப்பாளர் கதி. இன்னும் படத்திற்காக ஈடுபாட்டுடன் ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

லாக்கப் காட்சிகளில் நடக்கும் கொடுமைகளை காட்சிப்படுத்திய விதம் நம்மை உறைய வைக்கிறது. அந்தக் கொடுமைகளை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் அனைத்து வயதினரும் படம் பார்க்க ஏதுவாக இருந்திருக்கும்.

ஜெய் பீம் – தமிழ் சினிமாவில் புது ஒளி

 

Credits – dinamalar.com

Share This Post

Like This Post

0

Related Posts

0
0

    Leave a Reply

    Your email address will not be published.

    A mininum rating of 0 is required.
    Please give a rating.
    Thanks for submitting your rating!

    Thanks for submitting your comment!

    Playlist

    Advertisement

    Editor Picks

    Advertisement