நடிகர்கள்: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன்
இசை: அனிருத்
இயக்கம்: நெல்சன்
சினிமா வகை: Action, Comedy, Crime
கால அளவு: 2 Hrs 36 Min
சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.
ராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், ராணுவ வேலையை விட்டு, விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்.
அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக மனுஷன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சாணிக் காயிதம் படத்திற்கு முன்பாகவே செல்வராகவனை திரையில் பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் நெல்சன் என்பது அனைவருக்கும் தெரியும். ஃபேன் பாயாகவே இந்த படத்தை இயக்கி இருக்கிறார் நெல்சன். போக்கிரி படத்தில் இடியே விழுந்தாலும் பெரிய அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத கதாபாத்திரம் தான் வீரராகவன் கதாபாத்திரம். அதே போல இன்டர்வெல் பிளாக்கில் வரும் “ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” காட்சி ரசிகர்களை அட போட வைக்கிறது.
பீஸ்ட் படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநர் நெல்சனின் டைமிங் காமெடி சென்ஸ் தான். தெரிந்த கதை தான் என்றாலும், அதை ஸ்க்ரீன்பிளே செய்த விதத்தில் அசத்தி உள்ளார் நெல்சன். நடிகர் விஜய்யின் வெறித்தனமான நடிப்பு, எனர்ஜி, ஃபிட்னஸ் என ஆக்ஷன் காட்சிகளை நம்பும் அளவுக்கு இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கிரணின் மால் செட் பிரம்மிக்க வைக்கிறது. எடிட்டிங் இன்னும் சற்றே க்ரிஸ்ப்பியாக இருந்திருக்கலாம். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் தான் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.பயங்கரவாதிகளில் ஒருவனாக வரும் பிரபல மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரே விஜய்க்கு உதவுவது செம ட்விஸ்ட்டாக இருந்தாலும், படத்தை நகர்த்த வைத்ததை போலவே உள்ளது. படத்தின் ரியல் வில்லன் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. அதே போல, இயக்குநர் நெல்சன் ஆக்ஷன் மற்றும் காமெடி என பேக்கேஜ் பண்ணி கதை சொன்ன விதத்தில் பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் கதைக்களமும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அந்த படத்தின் ஸ்க்ரீன் பிளேவில் டார்க் காமெடியை கலந்து ஹிட் கொடுத்ததை போலவே இங்கேயும் முயற்சி செய்துள்ளார் நெல்சன். பயங்கரவாதிகளின் கோரிக்கையின் பேரில் கைது செய்து வைக்கப்பட்ட அந்த பயங்கரவாத கும்பலின் தலைவனை விடுவித்த நிலையில், கிளைமேக்ஸில் விஜய் ஸ்பேஸ் ஜெட்டில் பண்ணும் வித்தியாசமான சம்பவம் லாஜிக் இல்லா மேஜிக் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பீஸ்ட் சும்மா பறக்குது.. சிறகுகள் இல்லாமல்!